அடிப்படை வசதி செய்து தரக்கோரி துணை முதல்-அமைச்சர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கூடலூர் அருகே அடிப்படை வசதி செய்துதரக்கோரி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை வசதி செய்து தரக்கோரி துணை முதல்-அமைச்சர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

கூடலூர்,

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனியில் சாக்கடை கால்வாய் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

தற்போது கூடலூர், லோயர்கேம்ப், குமுளி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அம்பேத்கர் காலனியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இந்தநிலையில் நேற்று மாலை கூடலூர்-குமுளி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடக்கிற சீரமைப்பு பணியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், பார்த்திபன் எம்.பி., கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கம்பம் நோக்கி கார்களில் திரும்பி கொண்டிருந்தனர்.

லோயர்கேம்ப் பகுதியில் அம்பேத்கர் காலனி அருகே வந்தபோது அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், காரில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, அம்பேத்கர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆகியோர் அம்பேத்கர் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் இந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதேபோல் கூடலூர் தம்மனப்பட்டியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்தனர். அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் காரை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com