திருவொற்றியூரில் ரத்த காயங்களுடன் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

திருவொற்றியூரில் ரத்த காயங்களுடன் ஆண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூரில் ரத்த காயங்களுடன் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே ராஜீவ்காந்தி நகரில் ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பதை அறிய அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.

அதில், நள்ளிரவில் காக்கி உடை அணிந்து வந்த 3 பேர் இறந்தவரின் உடலை தூக்கி வந்து போட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகே ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பரிசோதித்தனர். அதில் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் இறந்தவரை ஆம்புலன்சில் எடுத்து செல்ல மாட்டோம் என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாத ரெயில்வே போலீசார், விம்கோ நகர் அருகே ராஜீவ் காந்தி நகர் சாலையில் அந்த ஆண் பிணத்தை போட்டுச்சென்று விட்டதாக தெரியவந்தது.

இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள், ரெயில்வே போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் ரெயில்வே போலீசார் இதை மறுத்து உள்ளனர். தாங்கள் சம்பவ இடத்துக்கு வரவே இல்லை. இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பிணமாக கிடந்தவர், ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என தெரிவித்தனர்.

இதனால் பிணமாக கிடந்தவர் யார்?, எப்படி இறந்தார்?, அவரது உடலை தூக்கி வந்து போட்ட காக்கி உடை அணிந்தவர்கள் யார்? என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு போலீசாரும், ரெயில்வே போலீசாரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பிணமாக கிடந்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை இங்கு வந்து வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com