

மும்பை,
நாசிக் மாவட்டம் மாலேகாவ் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஒரு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் விசாரணையை விரைவாக முடிக்கும் வகையில் மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜனதா எம்.பி.யான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரை கடந்த 3-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சினையை காரணம் காட்டி பிரக்யா சிங் ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட்டு வழக்கில் தொடர்புடையவர்களை நேற்று ஆஜராக உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்றும் 2-வது முறையாக பிரக்யா சிங் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் பிரக்யா சிங் ஆஜராகவில்லை என அவரது வக்கீல் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரக்யா சிங் கடந்த ஏப்ரல் முதல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது டாக்டர்கள் அறிவுரை, மருத்துவ அறிக்கையின் பேரில் அவர் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். என்றார்.
இதேபோல வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் சுதாகர் சதுர்வேதி சொந்த காரணங்களுக்காக விசாரணைக்கு ஆஜராகவில்லை. மற்ற 5 பேரும் ஆஜராகி இருந்தனர்.