மாமல்லபுரத்தில் சுழலும் கதவினால் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் அவதி - புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றம்

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு எதிரில் அமைக்கப்பட்ட சுழலும் கதவினால் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் புராதன சின்னங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மாமல்லபுரத்தில் சுழலும் கதவினால் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் அவதி - புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றம்
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்னர், நாள்தோறும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் வண்ணம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சாலை மற்றும் பாடசாலை தெருவில் புராதன சின்னங்களின் பாதுகாப்பு கருதி வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

அதன் பின்னர், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு காரணமாக அர்ச்சுனன் தபசு சாலையில் உள்ள கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணை உருண்டை பாறை ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட சுழலும் கதவுகள் அகற்றப்பட்டு இரு சக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.

ஆனால் அர்ச்சுனன் தபசு எதிரில் உள்ள பாடசாலை தெருவில் மட்டும் சுழலும் கதவு அகற்றப்படாமல் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கும், மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் சென்று புராதன சின்னங்களை கண்டுகளிக்க சிரமமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாடசாலை தெரு வழியாக சுற்றுலா வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு இவ்வழியாக காலம், காலமாக அர்ச்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை கண்டுகளித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சுழலும் கதவினால் உறவினர்களுடன் சுற்றுலா வரும் மாற்றுத்திறனாளிகளின் சைக்கிள் வண்டி சுழலும் கதவு அமைக்கப்பட்டதால் அவர்களால் அதைத்தாண்டி சென்று சிற்பங்களை கண்டுகளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளிகள் முக்கிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்வதை காண முடிகிறது.

எனவே மாற்றுத்திறனாளிகள் சைக்கிள் வண்டி செல்லும் வகையில் பாடசாலை தெருவில் உள்ள சுழலும் கதவினை அகற்றி பேரூராட்சி மற்றும் தொல்லியல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா வழிகாட்டி சங்கத்தின் சார்பில் எம்.கே.சீனிவாசன், வ.பாலன் மற்றும் சமூக ஆர்வலர்களும், உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com