மாமல்லபுரத்தில் கார் கடத்தல்; காவலாளிகள் 2 பேர் கைது

மாமல்லபுரத்தில் காரை கடத்தியதாக பண்ணை விடுதி காவலாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 3 மணி நேரத்தில் போலீசார் பிடித்தனர்.
மாமல்லபுரத்தில் கார் கடத்தல்; காவலாளிகள் 2 பேர் கைது
Published on

மாமல்லபுரம்,

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 39). இவர் நேற்று குடும்பத்துடன் சொகுசு காரில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் அவர் குடும்பத்துடன் குளித்தார். விடுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் பிரசன்னா தனது காரை நிறுத்தி இருந்தார். காரில் இருந்த சாவியை அவர் எடுக்க மறந்துவிட்டார்.

அப்போது அங்கு இருந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் காரை கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் பிரசன்னா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் காரை கடத்திச்சென்ற வாலிபர்களை பற்றி விசாரித்தனர்.

அப்போது அந்த வாலிபர்கள் அதே பண்ணை விடுதியில் காவலாளிகளாக வேலை செய்து வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 2 பேரின் செல்போன் எண்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது இருவரும் நெம்மேலி என்ற இடத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார் ஒன்று நிற்காமல் சென்றதை கண்ட போலீசார் விரட்டி சென்று காரை மடக்கினர்.

அப்போது காரில் இருந்து தப்பி ஓட முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்கள் கடத்திச்சென்ற காரையும் மீட்டனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் திண்டிவனம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24), அரிகேஷ் (23) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் அந்த கடற்கரை பண்ணை விடுதியில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கி உள்ளவர்கள் என்றும் தெரிய வந்தது.

காரை கடத்திச்சென்றவர்களை 3 மணி நேரத்தில் துரத்திச்சென்று கைது செய்து, காரையும் மீட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் அதிமானி பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com