மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்; படகு சேதம்

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. அப்போது ராட்சத அலை தாக்கியதால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு ஒன்று சேதம் அடைந்தது.
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்; படகு சேதம்
Published on

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலை கரைப்பகுதியை நோக்கி முன்னேறி வந்துவிட்டதால் மணல்பரப்பு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துவிட்டது. ராட்சத அலை தாக்கியதால் தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றின் சிமெண்டு தடுப்புகள் கீழே சரிந்து விழுந்தன.

மேலும் தனியார் நட்சத்திர ஓட்டலின் மற்றொரு தடுப்புச் சுவரில் ராட்சத அலைகள் தாக்கி வருவதால் எப்போது அது இடிந்து விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது.

கரைபகுதி முழுவதும் கடல் நீர் முன்னேறி வந்துவிட்டதால் நட்சத்திர ஓட்டல், மற்றும் விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு பயணிகள் பலர் சூரிய குளியலில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். கரைப்பகுதியில் 10 மீட்டர் தூரம் வரை ராட்சத அலை ஆக்கிரமித்து விட்டதால் மீனவர்களும் தங்கள் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ராட்சத அலை தாக்கி சேதம் அடைந்தது.

தமிழக அரசும், மீன்வளத்துறையும் மாமல்லபுரம் கடற்கரை முழுவதும் தூண்டில் வளைவு அமைத்து கடல் அரிப்பு ஏற்படாத வகையில் வழிவகை செய்ய வேண்டும். மீனவர்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com