மாமல்லபுரத்தில் பேனர்களை அகற்றாவிட்டால் வழக்கு போலீசார் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி முடிந்தவுடன் பேனர்களை அகற்றாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மாமல்லபுரத்தில் பேனர்களை அகற்றாவிட்டால் வழக்கு போலீசார் எச்சரிக்கை
Published on

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் முக்கிய இடங்களில் அரசியல் கட்சியினர் வைக்கும் விளம்பர பலகைகளை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அகற்றுவது கிடையாது. நீண்ட நாட்களாக வைக்கப்படுகிறது. பழைய விளம்பர பேனரை மறைத்து மற்றொரு தரப்பினர் பேனர் வைக்கும்போது அடிக்கடி மோதல் ஏற்படுகிறது

இதையடுத்து விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை விளக்கி மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்பினருக்கு விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி பொது இடங்களில் பேனர்கள் வைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. எனவே மாமல்லபுரத்தில் சுற்றுலாவின் அழகை பாதிக்காத வகையில் பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்களை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் உடனடியாக எடுத்து விட வேண்டும். மாத கணக்கில் பொது இடங்களில் பேனர்கள் இருக்கக்கூடாது.

குறிப்பாக போலீசாரின் முன்அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்க வேண்டும். குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும் பேனர்களை அப்புறப்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும். அந்த பேனர்களும் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணமே மது அருந்தி வாகனம் ஓட்டுவது தான். வாகன சோதனையின்போது பிடிபடும் நபர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் சிபாரிசுக்கு வருகின்றனர். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் குடும்ப சூழ்நிலைகளை கருதி அரசியல் கட்சியினர் சிபாரிசு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு காவல் துறை சார்பில் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com