மாமல்லபுரம், மதுராந்தகத்தில் ரூ.10 லட்சம் சிக்கியது

மாமல்லபுரம், மதுராந்தகத்தில் ரூ.10 லட்சம் சிக்கியது.
மாமல்லபுரம், மதுராந்தகத்தில் ரூ.10 லட்சம் சிக்கியது
Published on

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரை பறக்கும் படையினர் மடக்கி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி பகுதியை சேர்ந்த திவ்யானந்த குப்தா தண்டபாணியிடம் இருந்த வெளிநாட்டு பணமான 33 டாலரை பறக்கும் படையினர் கைப்பற்றினர். அந்த பணம் திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதே போன்று நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்கால் பகுதியில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி சென்ற வேனை வழிமறித்து அதில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்தை கைப்பற்றினர். அந்த பணம் திருப்போரூர் துணை தாசில்தார் ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பொன்னையா உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பறக்கும் படை தாசில்தார் பர்வதம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னாபாஷா மற்றும் போலீசார் மதுராந்தகம்- சூனாம்பேடு சாலையில் மாம்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த தர்பூசணி வியாபாரி இத்ரியாஸ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

இதே போல் சித்தாமூர் அடுத்த ரோட்டுகடை என்ற இடத்தில் திண்டிவனத்தில் இருந்து செய்யூர் நோக்கி சென்ற காரை மடக்கி வாகன தணிக்கை செய்த போது தர்பூசணி வியாபாரிகள் திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்தையும், மரக்காணம் அடுத்த நல்லுரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6 லட்சத்து 83 ஆயிரம் மதுராந்தகம் தாசில்தார் ஜெய்சித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com