புரட்சி பாரதம் நிர்வாகி கைதை கண்டித்து: மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்சி பாரதம் நிர்வாகி கைதை கண்டித்து: மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் புரட்சி பாரதம் கட்சியில் துணை அமைப்பாளராக உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட புரட்சி பாரதம் நிர்வாகியை விடுவிக்க கோரியும், கைது செய்த சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பிறகு தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, விசாரணை நடத்தி கைது செய்யப்பட்ட மணிகண்டனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட மணிகண்டன் விடுவிக்கப்பட்டார்.

மேலும், எந்த விசாரணையும் நடத்தாமல் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததின் பேரில், புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக இந்த போராட்டத்தில் ஈடுபட மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச்சாலையில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக போலீஸ் நிலையம் நோக்கி சென்றதால் மாமல்லபுரம்-கோவளம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com