தாராபுரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன்நகை திருடியவர் கைது

தாராபுரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன்நகை திருடியவர் கைது
Published on

தாராபுரம்,

தாராபுரத்தில் அலங்கியம் ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு சொந்தமாக ஒரு திருமண மண்டபம் உள்ளது. இவரது மனைவி பங்காருலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா. இவர் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18-ந்தேதி காலையில் பரமசிவம் தோட்டத்திற்கு சென்றுவிட்டார். இதனால் பங்காருலட்சுமியும், அவரது மகள் கார்த்திகாவும் வீட்டை பூட்டி சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நடைபயிற்சிக்காக சென்று விட்டனர்.

பின்னர் நடைபயிற்சியை முடிந்ததும் இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம ஆசாமி திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகை திருடிய ஆசாமியை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரமசிவம் தனது வீட்டிற்கு அருகே புதுவீடு ஒன்று கட்டியுள்ளார். கட்டுமான பணிக்காக வந்த சிலர், தங்குவதற்கு இடம் இல்லாததால், பரமசிவத்தின் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர். கட்டுமான வேலைகள் முடிந்ததும், திருமண மண்டபத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள், அதை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் பரமத்தி வேலூர், ஆனங்கால் அருகே உள்ள சேடர்பாளையத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 26) என்கிற வாலிபர் மட்டும், பரமசிவத்தின் அனுமதியோடு திருமண மண்டபத்தில் தங்கிவந்துள்ளார். வெள்ளைச்சாமி வெளியிடத்திற்கு சென்று கட்டிட வேலை செய்வதும், வேலை இல்லாத நாட்களில் பரமசிவத்தின் வீட்டு வேலைகளை கவனிப்பதுமாக இருந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று காலை வெள்ளைச்சாமி திருமண மண்டபத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு அவரை காணவில்லை. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளைச்சாமியை செல்போனில் தனிப்படை போலீசார் தொடர்பு கொண்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வெள்ளைச்சாமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பூமிபாலன், மதியழகன் மற்றும் சின்னச்சாமி, காளிமுத்து, கார்த்தி, நவேந்திரன் ஆகிய தனிப்படை போலீசார் வெள்ளைச்சாமியை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வெள்ளைச்சாமி தாராபுரம் புறவழிச்சாலையில், ஒரு தனியார் உணவுவிடுதி முன்பு நின்று கொண்டு, பஸ்சுக்காக காத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் பரமசிவத்தின் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை வெள்ளைச்சாமி திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளைச்சாமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 41 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு வெள்ளைச்சாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com