

பெங்களூரு: பெங்களூரு அருகே முகநூலில் நேரலையில் பேசி வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. போலீசாரின் தொல்லையே காரணம் என வாலிபர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கொலையாளிகளுக்கு அடைக்கலம்
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் பகுதியை சேர்ந்தவர் அமித் (வயது 27). கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெலமங்களாவில் ரேவந்த் என்பவரை மர்மநபர்கள் நடுரோட்டில் வைத்து கொலை செய்திருந்தனர். இந்த கொலையை தர்ஷன், பிரவீன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதற்கிடையில், தர்ஷன், பிரவீனுக்கு அமித் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த நெலமங்களா டவுன் போலீசார், அமித், அவரது தாயை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அமித் மனம் உடைந்தார்.
போலீசார் மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில், முகநூலில் நேரலையில் பேசிய அமித், தர்ஷன் மற்றும் பிரவீன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று எனக்கு தெரியாது. அது தெரியாமல் தான் வீட்டில் தங்க வைத்தேன். ஆனால் அவர்களுக்கு நான் அடைக்கலம் கொடுத்ததாக கூறி, என்னையும், தாயையும் நெலமங்களா டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், போலீஸ்காரர்கள் பசவராஜ், கேசவ், கங்கண்ணா தொல்லை கொடுத்து, கொடுமைப்படுத்துகிறார்கள்.
அவர்களது தொல்லையால் தற்கொலை செய்கிறேன் என்று கூறி விஷத்தை குடித்தார். ஆனால் விஷத்தை குடித்த அமித் எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து, அமித்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நெலமங்களா போலீசார் விசாரித்து வருகின்றனர்.