

இதனால் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலை மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் கோவிலை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதால் வழக்கமாக வரும் பக்தர்கள் கோவிலுக்கு வரவில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டும் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
இந்த நிலையில் அய்யா கோவில் பின்புறம் உள்ள எம்.ஆர்.பி. நகரின் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு வசிப்பவர்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர், மணலி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டனர்.