மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை பலி: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு

மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை பலியான சம்பவத்தை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை பலி: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on

பெரம்பூர்,

சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்தவர் கோபால். வடமாநிலத்தை சேர்ந்த இவர், தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தை அபினேஷ் சரவ் ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காற்றில் பறந்துவந்த காற்றாடி மாஞ்சாநூல், குழந்தை அபினேஷ்சரவின் கழுத்தை அறுத்ததில் பெற்றோர் கண்எதிரேயே பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் குழந்தையின் உயிரை பறித்த மாஞ்சா நூல் காற்றாடியை பறக்க விட்டதாக பாரதி நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவரான நாகராஜ் (19), அவரது உறவினரான 15 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது. 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் நேதாஜி நகரைச் சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவரான சூரிய பிரகாசம் (19) என்பவர் மீதும் மாஞ்சாநூல் காற்றாடி பறக்க விட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் இருந்து மாஞ்சாநூல் காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் கப்பிகுமார் சரத் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விட்டவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களை பிடிக்க வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் மாஞ்சா நூல் காற்றாடி விற்கப்படுகிறதா? என சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு வைத்து இருந்த மாஞ்சா நூல் காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதற்கு முன்பு மாஞ்சா நூல் காற்றாடி விற்றது மற்றும் பறக்க விட்டதாக கைதான வண்ணாரப்பேட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (47), லோகநாதன் (65), விக்னேஷ் (35), கார்த்திக் (19), லோகேஷ் (19) ஆகிய 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் துணை கமிஷனர் சுப்புலட்சுமி முன்னிலையில் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை அபினேசின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகனின் உடலை பார்த்த கோபால், எங்கள் குழந்தைக்காகவே நாங்கள் வாழ்ந்து வந்தோம். திடீரென எங்கிருந்தோ பறந்துவந்த மாஞ்சாகயிறு குழந்தையின் உயிரை பறித்துவிட்டதே என்று கூறி கதறி அழுதார். தங்களது ஒரே மகனை இழந்து விட்டதால் கணவன்-மனைவி இருவரும் கதறி அழுதது, கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com