

சுரண்டை,
நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூர் சிற்றாற்றில் இருந்து பிரிந்து செல்கிறது மானூர் கால்வாய். மழைக்காலங்களில் இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் அந்த வழியில் உள்ள 20 குளங்கள் நிறைந்த பின்னர் மானூர் பெரிய குளத்தை அடைகிறது. ஆனால் இந்த கால்வாய் செல்லும் வழி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
மேலும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் கால்வாயின் வழியே செல்லும் தண்ணீர் மானூர் பெரிய குளத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய குளத்தின் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் பெரிதும் துன்பம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மானூர் பெரியகுளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயிகள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் வீரகேரளம்புதூர் முதல் மானூர் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் ஷில்பா மானூர் கால்வாயை அகலப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி கால்வாயை அகலப்படுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த பணிகளை அவர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அவற்றை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் வீரகேரளம்புதூர் தாசில்தார் அரிகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன், விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் பஷீர் அகமது, வருவாய் ஆய்வாளர் வானமாமலை, கிராம நிர்வாக அலுவலர் ஏஞ்சலா கவுரி பாத்திமா, கிராம உதவியாளர் அந்தோணி, சென்னை அண்ணா பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.