மாவோயிஸ்டு தம்பதி தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

புதுக்கோட்டையில் மாவோயிஸ்டு தம்பதி தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மடிக்கணினிகள், சிம் கார்டுகளை கைப்பற்றினார்கள்.
மாவோயிஸ்டு தம்பதி தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
Published on

புதுக்கோட்டை,

கர்நாடக மாநிலத்தில் நவீன ரக துப்பாக்கிகளை இயக்க பயிற்சி பெற்றவர்கள் என கூறப்படுபவர்கள், மாவோயிஸ்டுகளான தசரதன் (வயது 32), அவரது மனைவி செண்பகவல்லி என்கிற கனிமொழி (28), தசரதனின் சகோதரர் வெற்றி வீரபாண்டியன் (40) ஆவர். இதில் செண்பகவல்லி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்டு பாலு என்பவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தசரதன் உள்பட 3 பேரையும் திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் வைத்து, கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பூண்டி காட்டுப்பகுதியில் தங்கள் இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பதற்கு திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் 3 பேரின் நீதிமன்ற காவல் முடிந்ததை தொடர்ந்து, அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது கியூ பிரிவு போலீசார் மாவோயிஸ்டு தம்பதி உள்பட 3 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் தீவிரவாத தடுப்பு கமண்டோ போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்புடன், திருவள்ளூர் சட்டம், ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, திருவள்ளூர் கியூபிரிவு இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்துக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர்.

3 பேரும் திருக்கோகர்ணம் கோவில்பட்டி சாலையில் சில மாதங்களுக்கு முன்பு தங்கியிருந்ததால், அந்த வீட்டிற்கு 3 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அவர்களை புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை சமுதாய கூடத்தில் வைத்து தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று காலை மாவோயிஸ்டு தம்பதி உள்பட 3 பேரையும், திருக்கோகர்ணம் கோவில்பட்டி சாலையில் அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து வந்து, திருக்கோகர்ணம் கிராம நிர்வாக அதிகாரி ஜெயசங்கர் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார் முன்னிலையில், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை திறந்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த மடிக்கணினிகள், பென் டிரைவ்கள், ஹார்டு டிஸ்க்குகள், சிம் கார்டுகள், புரட்சிகர கருத்துகளை உடைய துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை திருவள்ளூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் வீட்டின் உரிமையாளர் ஆசிரியை ராணியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூறுகையில், தசரதனும், அவரது மனைவி செண்பகவல்லியும் தாங்கள் காதலர்கள் எனவும், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் எனவும் கூறினர். இதை நம்பி தான் நான் அவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தேன் என்றார். தொடர்ந்து போலீசார் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் முகவரியை உறுதி செய்வதற்காக ஆதார் அடையாள அட்டையின் நகலை திருவள்ளூர் போலீசார் பெற்று கொண்டனர்.

இந்த விசாரணையின் போது, புதுக்கோட்டை கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் போலீசார் மாவோயிஸ்டுகளை, அவர்கள் புதுக்கோட்டையில் குடியேறுவதற்கு முன்பு மதுரையில் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

போலீசார் மாவோயிஸ்டுகளை மதுரைக்கு கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்ற அழைத்து வந்தபோது, அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், விஜய் மல்லையாவை கைது செய்ய வேண்டும் எனவும், மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com