மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் 240 தொகுதிகளில் போட்டி சரத்பவார் தகவல்

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 240 தொகுதிகளில் போட்டியிடும் என சரத்பவார் நேற்று தெரிவித்தார்.
மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் 240 தொகுதிகளில் போட்டி சரத்பவார் தகவல்
Published on

மும்பை,

மராட்டியத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாத வாக்கில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணியாக சந்திக்கின்றன.

இதேபோல் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலை ஒன்றாக எதிர்கொள்கின்றன.

இ்ந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், சட்டமன்ற தேர்தலில் 240 தொகுதிகளில் போட்டியிடுவது என உறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடையும். தொடர்ந்து தொகுதி வாரியாக வேட்பாளர் பட்டியல் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

நான் மும்பையில் நவநிர்மாண் சேனா தலைவர்களை சந்தித்து பேசினேன். அக்கட்சி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பலமாக எதிர்த்து வருகிறார்கள். இதற்காக சில நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளனர். நவநிர்மாண் சேனா கட்சி தேர்தலை புறக்கணிக்க ஆதரவு தெரிவிக்கலாம் என தெரிகிறது. ஆனால் இது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

பல்வேறு தேசிய அளவிலான கட்சிகள் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு எதிராக உள்ளன. இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் உள்ளது.

ஆனால் யாரும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தங்கள் கட்சியினர் கட்சி தாவலில் ஈடுபடுவது குறித்து தெரிவித்த அவர், பதவியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அமலாக்க துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் உதவியுடன் மற்ற கட்சி தலைவர்களை வலுக்கட்டாயமாக தங்கள் கட்சியில் இணைத்து வருகிறார்கள்.

பா.ஜனதா மற்ற கட்சிகளின் தலைவர்கள் பின்னாலேயே எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com