மராட்டிய கிராமப்புறங்களை ஆக்கிரமிக்கும் கொரோனா சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

மராட்டியத்தில் கிராமப்புறங்களை கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மராட்டிய கிராமப்புறங்களை ஆக்கிரமிக்கும் கொரோனா சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்
Published on

மும்பை,

நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் மராட்டிய மாநிலம் கொரோனா வைரசால் அதிகமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. அதுமட்டும் இன்றி தினமும் 10 ஆயிரத்துக்கும் குறையாமல் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நகர் பகுதியை மோசமாக பாதித்து வந்த வைரஸ் தாக்கம் தற்போது மராட்டிய கிராமப்புறங்களிலும் வேகமாக பரவுவதாக வெளியாகியிருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா பரவத்தொடங்கிய தொடக்கத்தில் முதலில் பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகள் பாதிக்கப்பட்டன. தற்போது நிலைமை மாறி வருகிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 5 மாதங்கள் முடிவில் கிராமப்புறங்களில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நோய் தாக்கத்தின் காரணமாக இறப்புகளும் அதிகரித்து வருகிறது.

இந்த மாதம் 1-ந் தேதி வரையிலான நிலவரப்படி மராட்டியத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 118 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 740 பேர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்டவர்கள். அதேபோல இங்கு 14 ஆயிரத்து 994 இறப்புகள் பதிவாகி இருந்தது.

இந்த இறப்புகளில் 12 ஆயிரத்து 543 பேர் (83.65 சதவீதம்) நகர் பகுதியையும், 2 ஆயிரத்து 451 பேர் கிராமப்புறத்தையும் சேர்ந்தவர்கள்.

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. நகர் புறத்தில் இருந்து மக்கள் அதிகப்படியாக கிராமங்களுக்கு பயணம் செய்வதால் கிராமங்களில் நோய் அதிகம் பரவி வருகிறது.

ஆகஸ்ட் 25-ந் தேதி(நேற்று முன்தினம்) வரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 823 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 22 பேர் நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள். இதுவரை 22 ஆயிரத்து 794 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இறப்புகளில் 17 ஆயிரத்து 423 பேர்(76.43 சதவீதம்) நகர் புறத்தை சேர்ந்தவர்கள். மேலும் 5 ஆயிரத்து 371 பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள்.

இது கொரோனா வைரஸ் கிராமப்புறங்களிலும் அதிகம் பரவி வருவதை காட்டுகிறது. சிலர் சட்டவிரோதமாக ஊரடங்கு உத்தவை மீறி கிராமப்புறங்களுக்குள் பதுங்கியிருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இது தொற்று பரவுவதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com