புத்தாண்டில் மெரினா கடற்கரை மிளிரும்: மீண்டும் மீன்கடைகள் அமைப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்

புத்தாண்டில் மெரினா கடற்கரை மிளிரும், மீண்டும் மீன்கடைகள் அமைப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிக்கான நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
புத்தாண்டில் மெரினா கடற்கரை மிளிரும்: மீண்டும் மீன்கடைகள் அமைப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்
Published on

சென்னை,

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மெரினா கடற்கரை உலகிலேயே நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்களில் சராசரியாக லட்சக்கணக்கான பேர் வருவது வழக்கமாக உள் ளது. கடற்கரையை முறையாக பராமரிக்காததால், பிளாஸ்டிக், அழுக்கு துணிகள், பேப்பர் குப்பைகள் என கடற்கரை முழுவதும் சுற்றுலா பயணிகளின் முகம் சுளிக்கும் வகையில் காணப்பட்டது. இரவில் சட்டவிரோத செயல்களுடன் கொலை நடக்கும் அளவுக்கும் சென்றுவிட்டது.

அதேபோல் காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை சாலை மிக குறுகிய அளவில் இருப்பதால் அலுவலக நேரங்களில் இந்தசாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் இந்தப்பாதையில் மெரினா லூப் சாலையை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. குறிப்பாக 2.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையில் ரூ.47.5 கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சாந்தோம் தேவாலயத்துக்கு பின்புறம் லூப் சாலையின் ஓரத்தில் மீன் சந்தை செயல்பட்டு வந்தது.

இதனை அப்புறப்படுத்த முயன்ற போது அப்பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சந்தித்த மாநகராட்சி நிர்வாகம், அதில் வெற்றி கண்டு கடைகளை அப்புறப்படுத்தி கான்கிரீட் சாலையை அமைத்தது. இந்த சாலை அமைத்ததற்கு பிறகும் சாலையின் இருபகுதியிலும் மீன் சந்தை செயல்பட தொடங்கியது.

இந்தநிலையில் மெரினா கடற்கரையை சுத்தம் செய்வது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், புத்தாண்டுக்கு முன்பாக மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது. இதற்காக மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் மெரினா கடற்கரையில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி லூப் சாலையில் உள்ள மீன் அங்காடிகள் இடித்து தள்ளப்பட்டு உள்ளன. தொடர்ந்து அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மீண்டும் அப்பகுதியில் யாரும் மீன் கடைகள் அமைக்க கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இருந்தாலும் மீனவ பெண்கள் தங்கள் வாழ்வாதாரம் போய்விட்டதாக கூறி, லூப் சாலையில் இருந்து 10 அடி தள்ளி கடற்கரை மணலில் அமர்ந்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று மெரினா கடற்கரை சுத்தம் செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்க முடியாது. புதிய நிழற்கூடைகள், கழிப்பிடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. மீன் சந்தைக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அனைத்து வசதிகளுடன் மீன் சந்தை கட்டிடங்கள் கட்டித்தரப்பட உள்ளது.

அதில் சென்று மீனவர்கள் மீன் விற்பனை செய்யலாம். தொடர்ந்து மெரினா கடற்கரையை பாராமரிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டில் மெரினா கடற்கரை மிளிரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com