தீயணைப்பு வீரர்களுக்கு கடல் பகுதி தொழில்நுட்ப பயிற்சி

தீயணைப்பு படை வீரர்களுக்கு பல்வேறு வகையான கடல்பகுதி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்களுக்கு கடல் பகுதி தொழில்நுட்ப பயிற்சி
Published on

பனைக்குளம்,

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு கடல்பகுதி மீட்பு பணிகளுக்கு என 25 தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்களுக்கு கடல்பகுதி நீச்சலின் பல்வேறு தொழில்நுட்பங்கள், நவீன சாதனங்களை இயக்குவது மற்றும் வேகம் ஆகியவற்றை அதிகரிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முட்டுக்காடு, கோவளம், மெரீனா ஆகிய மூன்று இடங்களில் காவல் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது தீயணைப்பு படை வீரர்களுக்கு தொடர்ந்து கடல்பகுதி தொழில்நுட்ப பயிற்சி வழங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரியமான் மற்றும் தனுஷ்கோடி கடற்கரை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரப்பன்வலசையில் பயிற்சியாளர் ஜெகன்கோஷி மற்றும் அவரது குழுவினர் தீயணைப்பு படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் இடையே கடல் பற்றிய அறிவு, மீட்பு பணியில் உள்ள புதிய தொழில் நுட்பம், கடல்பகுதி மீட்பு பணிக்கு உதவும் பல்வேறு நவீன சாதனங்களை இயக்குவது, பேரிடர் காலங்களின்போது எவ்வாறு விரைந்து செயல்படுவது, முடிவு எடுக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகரிக்க இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

முதலுதவி

இந்த பயிற்சியில் கடலில் சிக்கிக் கொண்டவர்களை நவீன சாதனங்களை பயன்படுத்தி எவ்வாறு உடனடியாக மீட்பது மற்றும் மீட்கப் பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவை மிக தெளிவாக தீயணைப்பு படை வீரர்களுக்கு விளக்கப்பட்டது. பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் கடல் பகுதியில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க உதவும் ரப்பர் போட் உள்ளிட்ட நவீன சாதனங்களை இயக்கினர். மேலும், கடல் பகுதியில் சிக்கிக்கொண்ட நபர்களை தேடும் பணிக்கு உதவும் ஸ்கூபா டைவிங் பயிற்சியையும் மேற்கொண்டனர். இதன் மூலம் கடல் பகுதியில் சிக்கிக்கொண்டவர்களை விரைவாக மீட்க முடியும். தீயணைப்பு வீரர்களுக்கு இத்தகைய பயிற்சி அளிப்பது இந்தியாவிலேயே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com