

கரூர்,
கரூர் அருகே வாங்கலை அடுத்த கருப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் ஜோதி(வயது 27). ஆசிரியையான இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. ஜோதிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 30-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்ற ஜோதி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜோதியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜோதியின் சகோதரர் சுரேஷ்குமார் வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜோதி எழுதி வைத்த 2 கடிதங்கள் வீட்டில் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என ஒரு கடிதத்தில் அவர் எழுதியிருந்தார். மற்றொரு கடிதம் மாப்பிள்ளைக்கு எழுதியிருந்தார். அதில் நீங்கள் (மாப்பிள்ளை) வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். எனக்கு உங்களோடு வாழ கொடுத்து வைக்கவில்லை என உருக்கமாக எழுதியிருந்தார். இதனால் வீட்டில் இருந்தவர்களும், போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் ஜோதியின் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்து கிணற்றின் மேல் பகுதியில் அவரது செல்போன் இருந்ததை அப்பகுதியினர் கண்டனர். இதனால் அனைவரும் அந்த விவசாய தோட்ட கிணற்றிற்கு விரைந்து சென்றனர். அப்போது செல்போன் அருகே துப்பட்டாவும், செருப்பும் அதில் இருந்தது. கிணற்றின் உள்ளே குதித்து ஜோதி தற்கொலை செய்திருக்கலாம் என கருதினர்.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு வாங்கல் போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நள்ளிரவு 2.30 மணி அளவில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) கந்தசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.
கிணற்றில் இறங்கி தீயணைப்பு வீரர்கள் பார்வையிட்டனர். மேலும் பாதாள கரண்டி மூலம் கிணற்றின் உள்ளே தண்ணீரில் உடல் எதுவும் சிக்குகிறதா? என தேடினர். அப்போது ஜோதியின் உடல் சிக்கியது.
இதையடுத்து கயிறு கட்டி ஜோதியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மேலே தூக்கினர். 1 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி நேற்று அதிகாலை 4 மணி அளவில் அவரது உடலை மீட்டனர். ஜோதியின் உடலில் வயிற்று பகுதியில் கல் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. வயிற்றில் கல்லை கட்டிக்கொண்டு ஜோதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜோதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயமான ஜோதி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயமான ஆசிரியை ஒருவர் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.