4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை-தாலிக்கு தங்கம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை-தாலிக்கு தங்கம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு 4 ஆயிரம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

பெண்களின் நலனுக்காக ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதேபோல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பெண் கல்வி ஊக்கப்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-2018-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 738 பேருக்கு ரூ.6 கோடியே 76 லட்சம் மதிப்பில் தங்கமும், ரூ.10 கோடியே 18 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2018-2019-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 681 பேருக்கு ரூ.9 கோடியே 20 லட்சம் மதிப்பில் தங்கமும், ரூ.13 கோடியே 5 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பட்டப்படிப்பு முடித்த 2 ஆயிரத்து 488 பெண்களுக்கும், 10-ம் வகுப்பு படித்த 1,512 பெண்களுக்கும் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.12 கோடி மதிப்பில் தங்கமும், ரூ.16 கோடியே 22 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்குகிறது. இதனை பெற்று மக்கள் தங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மேலும் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் திண்டுக்கல் மாநகராட்சியில் ராஜலட்சுமிநகர், பி.ஏ.கே.காலனி ஆகிய 2 இடங்களில் அம்ரூத் திட்டத்தில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை சேகரிப்பதற்கு, ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட 22 பேட்டரி கார்களை, துப்புரவு பணியாளர்களிடம் அமைச்சர் வழங்கினார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் அய்யம்புளி கண்மாயில் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு, ஒடுக்கத்தில் 500 மரக்கன்றுகள் நடவு பணியை தொடங்கி வைத்தார்.

அதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் அரசு கைத்தறி கண்காட்சி நடக்கிறது. இதில் கோவை, ஈரோடு, திருச்சி, கரூர், காஞ்சீபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரான கைத்தறி சேலைகள், வேட்டிகள் உள்ளிட்ட ஆடைகள் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் ரூ.50 லட்சத்துக்கு ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகளில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், பரமசிவம் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com