மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த 6 ஜோடிகளுக்கு திருமணம்

பெரம்பலூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில், வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த 6 ஜோடிகளுக்கு சென்னையில் நவம்பர் 4-ந்தேதி திருமணம் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த 6 ஜோடிகளுக்கு திருமணம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் 23-ம் ஆண்டு விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் காணும் நிகழ்ச்சி நேற்று பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் சிம்மச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சையது முஸ்தபா முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பொன்னுசாமி, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சந்திரகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் காணும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தனர்.

இதில் 3 பெண் மாற்றுத் திறனாளிகளை, மாற்றுத்திறனாளி அல்லாத ஆண்கள் 3 பேர் திருமணம் செய்ய முன்வந்த னர். இதேபோல் 2 ஆண் மாற்றுத்திறனாளிகளை, மாற்றுத்திறனாளி அல்லாத 2 பெண்கள் திருமணம் செய்துகொள்ள முன்வந்தனர். ஒரு பெண் மாற்றுத்திறனாளியை, இன்னொரு ஆண் மாற்றுத்திறனாளி திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்தார். இதனால் சுயம்வரம் நிகழ்ச்சியில் மொத்தம் 6 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் சிம்மச்சந்திரன் கூறுகையில், தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 6 ஜோடிகளை போல் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி மொத்தம் 100 ஜோடிகளுக்கு இலவசமாக வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி சென்னையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு தலா 4 கிராம் தங்கம், 51 வகையான சீர்வரிசை பொருட்கள், 2 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது என்றார். சுயம்வரம் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வதற்கு முன்வந்த மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் பொருளாளர் நல்லதம்பி வரவேற்றார். முடிவில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com