திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா
Published on

மாசி பிரம்மோற்சவ விழா

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா, நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக தியாகராஜ சாமி சன்னதி மண்டபத்தில் கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு விசேஷ பூஜைகள், யாகங்கள் நடந்தன. விநாயகர் உற்சவர், தியாகராஜ சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஒற்றீசா, தியாகேசா' என விண்ணதிர முழங்கினர்.

தேரோட்டம்

விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை உற்சவர் சந்திர சேகரர் சூரிய பிரபை, மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார். இதேபோல் விழா நாட்களில் பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி விமானம், யானை, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானத்தில், உற்சவ சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 9 மணியளவில் உற்சவர் வடிவுடையம்மன், சந்திரசேகரர் திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 15-ந் தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு குழந்தை ஈஸ்வரர், கல்யாணசுந்தரம் மற்றும் சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெறுகிறது.

பறி உற்சவம்

வருகிற 17-ந்தேதி இரவு தியாகராஜ சாமி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுபெறுகிறது.

தியாகராஜ சாமி கோவிலின் மிக முக்கிய திருவிழா என்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எனவே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com