வடலூரில் 4 பஸ்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய முகமூடி கும்பல்

வடலூரில் 4 பஸ்களின் கண்ணாடியை முகமூடி கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல் செஞ்சியிலும் 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
வடலூரில் 4 பஸ்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய முகமூடி கும்பல்
Published on

வடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இயங்கின.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரத்துக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் பஸ்சை வழிமறித்தது.

தொடர்ந்து அவர்கள் முகத்தில் பச்சை நிறத்தில் துணியை கட்டிக்கொண்டு, அதில் வந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்க செய்தனர். பின்னர் அவர்கள் உருட்டு கட்டை மற்றும் கல் ஆகியவற்றால் அடித்து பஸ்சின் கண்ணாடியை நொறுக்கினர். இதை தொடர்ந்து சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ், திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணாடியையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கி, கல் வீசினர்.

இதேபோல் கடலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ் வடலூர்-கும்ப கோணம் சாலையில் கருங்குழி அருகே வந்த போது ஒரு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழிமறித்தனர். தொடர்ந்து அவர்கள் முகத்தில் பச்சை நிறத்தில் துணியை கட்டிக்கொண்டு இரும்பு பைப்பால் பஸ்சின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

முகமூடி கும்பலால் 4 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு பஸ் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வந்து கொண்டிருந்தது. சத்தியமங்கலம் என்ற இடத்தில் வந்த போது யாரோ மர்ம நபர்கள், பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில் அந்த கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.

இதேபோல் மேல்மருவத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட கர்நாடக மாநில அரசு பஸ், செஞ்சி அருகே ஊரணித்தாங்கல் என்ற இடத்தில் வந்த போது யாரோ மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com