

துமகூரு: துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா பெத்தனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று அதிகாலையில் வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதே கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொரு வாலிபரும் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குப்பி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து 2 வாலிபர்களின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அவர்கள், பெத்தனஹள்ளி அருகே தலித் காலனியை சேர்ந்த கிரீஷ் மற்றும் கல்லூரு கிராஸ் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவே ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.அதே நேரத்தில் அந்த தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை திருட முயன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதாவது கிணற்றுக்குள் இருந்த மின் மோட்டாரை கிரீஷ், மஞ்சுநாத் உள்பட 4 பேர் திருட முயற்சி செய்திருக்கலாம் என்றும், அந்த சந்தர்ப்பத்தில் 2 பேர் தப்பித்து ஓடி இருக்கலாம் என்றும், கிரீஷ், மஞ்சுநாத்தை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். என்றாலும், கிரீஷ், மஞ்சுநாத்தை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்? என்பதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து குப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் குப்பியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.