மாதா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்

மாதா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி கல்லூரி மாணவி, சிறுவர், சிறுமிகள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாதா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தில் மாதா தேவாலயம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த தேவாலயத்தில் ஒரு நாள் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாதா சிலை ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது ஒரு லோடு ஆட்டோவில் பட்டாசுகளை வைத்து, அதனை சிலர் வெடித்து கொண்டே வந்தனர். அந்த லோடு ஆட்டோவில் சிறுவர்களும், பெண்களும் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் ஊர்வலத்தின்போது வெடிக்கப்பட்ட ராக்கெட் வெடியானது, சற்று தூரம் மேல்நோக்கிச்சென்றபோது, மின்வயர் மீது பட்டு மீண்டும் திரும்பி வந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் விழுந்தது.

இதனால் ஆட்டோவில் இருந்த அனைத்து வெடிகளும் ஒரே நேரத்தில் நாலாபுறமும் வெடித்து சிதறியது. இதில் லோடு ஆட்டோவில் அமர்ந்து பயணம் செய்து வந்த சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த காவியா (வயது 9), அவருடைய தம்பி சஞ்சய் (8), போந்தவாக்கம் கிராமத்தைச்சேர்ந்த தர்சிணி (10), தோக்கம்பூரைச்சேர்ந்த அர்ஜூன் (11), ஜோஸ்வா (5), அரிஷ்பாபு (6), கல்லூரி மாணவியான பர்வீனா (21) ஆகிய 7 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் தர்சிணி, அர்ஜூன், அரிஷ்பாபு ஆகிய 3 பேருக்கு மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com