வெளிமாவட்ட மாணவர்கள் 1,495 பேர் இ-பாஸ் பெற நடவடிக்கை; முதன்மை கல்வி அதிகாரி தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் வெளிமாவட்டத்தில் தங்கி உள்ள 1,495 மாணவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் அறிவுறுத்தினார்.
வெளிமாவட்ட மாணவர்கள் 1,495 பேர் இ-பாஸ் பெற நடவடிக்கை; முதன்மை கல்வி அதிகாரி தகவல்
Published on

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி தொடங்கி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதையொட்டி தேர்வுக்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 21 ஆயிரத்து 303 பேர் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இதற்காக 310 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த தேர்வை அரசு அறிவித்து உள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி நடத்துவது தொடர்பாக நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனியாகவும், தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரி உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் தேர்வு மையங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து பெற்றோருக்கும் தேர்வு நடைபெறுவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிமாவட்டத்தில் தங்கி உள்ள 1,495 மாணவ, மாணவிகளுக்கு இ-பாஸ் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com