குறைந்த விலைக்கு பெரிய வெங்காயம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்

குறைந்த விலைக்கு தரமான பெரிய வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
குறைந்த விலைக்கு பெரிய வெங்காயம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தகவல்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசுகையில், வெங்காயம் விளையும் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது.

எனவே சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக, வெளிச்சந்தையில் நிலவும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் கூட்டுறவு துறையின் சார்பாக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழ்நாடு முழுவதும் செயல்படும் கூட்டுறவு அங்காடிகள், சுயசேவை பிரிவுகள், சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபவ பல்பொருள் அங்காடி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 21 அம்மா சிறு பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ தரமான பெரிய வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதனை வாங்கி பயன் பெறலாம். மேலும் தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் தரமான பெரிய வெங்காயம் கிடைக்க கூட்டுறவுத்துறையினர் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளர் சண்முகம், துணைப்பதிவாளர் (பொது வினியோகத்திட்டம்) ஜெகத்ரட்சகன், கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com