தேனி மாவட்டத்தில் புயல், கனமழையில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் - வேளாண்மை அதிகாரி தகவல்

தேனியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், புயல் காற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் புயல், கனமழையில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் - வேளாண்மை அதிகாரி தகவல்
Published on

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கனமழை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதிக காற்றும், மழையும் இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் இந்த புயல் காற்று மற்றும் கனமழையில் இருந்து தங்களின் விளை பயிர்களை பாதுகாக்க தக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், சோளம், பருத்தி, கம்பு, நிலக்கடலை ஆகிய பயிர்களில் புயலால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுசெய்ய உடனடியாக பயிர் காப்பீடு செய்வது அவசியம். இதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் நகல், பயிர் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது சேவை மையம் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

தென்னை பாதுகாப்பு

மழையின் காரணமாக பயிர் சேதத்தை தடுக்க விவசாயிகள் தங்கள் வயல்களில் முறையாக வடிகால் வசதி செய்திட வேண்டும். உரமிடுதல், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி தெளிப்பதை தவிர்க்க வேண்டும். தென்னை விவசாயிகள் நல்ல காய்ப்பு உள்ள தோப்புகளில் இளநீர், தேங்காய்களை முன்எச்சரிக்கையாக அறுவடை செய்ய வேண்டும். மரத்தின் தலை பகுதிகளில் அதிக எடையுடன் காணப்படும் முற்றிய தென்னை ஓலைகளை வெட்டி அகற்றிவிட வேண்டும். தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மரங்களின் அடிப்பகுதியில் மண்ணை கட்டுவதின் மூலம் தென்னை மரங்களை புயல் சேதத்தில் இருந்து காப்பாற்றலாம். தென்னை மரங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் தென்னை விவசாயிகள் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

நெல் வயல்களில் கனமழையால் தண்ணீர் தேங்கினால் வயல்களில் உள்ள தண்ணீரை தாழ்வான வாய்க்கால் அமைத்து வடித்து பின்பு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 1 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து பயிர்களை காப்பாற்ற வேண்டும். கனமழையால் பயிர் சேதம் ஏற்பட்டால் விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com