இறைச்சி, மீன் கடைகளில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - பொதுமக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை

புதுச்சேரியில் இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்ட பொதுமக்களை போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.
இறைச்சி, மீன் கடைகளில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - பொதுமக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை
Published on

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது 5-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி இடங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளின் முன்பும் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு குறியீடு வரையப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று ஒரு கிலோ இறைச்சி ரூ.800, சிக்கன் ஒரு கிலோ ரூ.240 என விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் அங்கு அரசின் கட்டுப்பாடான சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு போட்டி போட்டுக்கொண்டு இறைச்சி வாங்கிக் கொண்டு இருந்தனர்.

இதையொட்டி அங்கு வந்த போலீசார், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம். இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியபடி இருந்தனர். மேலும் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களை அழைத்து முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும்தான் இறைச்சி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று இறைச்சி வாங்கிச்சென்றனர்.

புதுச்சேரி உப்பளம் சாலையில் இருந்து வம்பாகீரப்பாளையம் செல்லும் வழி, சிமெண்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் நேற்று காலை பெண்கள் மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். அங்கு மீன் வாங்க வந்திருந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் திரண்டு நின்றனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்களை வாங்கிச்செல்லும்படி அறிவுறுத்தினார்கள். அதேபோல் நாளை (இன்று) முதல் சாலையோரத்தில் வைத்து மீன்களை வியாபாரம் செய்யக் கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com