சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவி

சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படவுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவி
Published on

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குதல் மற்றும் சுகாதாரத்தை பாதுகாத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன், தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பேசியதாவது:- கர்ப்பிணிகள், வளர்இளம் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உள்பட அனைவரும் சத்துக்குறைபாடின்றி ஆரோக்கியமாக இருந்திட ஏதுவாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் தற்போது மத்திய அரசு போஜன் அபியான் திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஊரகப்பகுதிகளிலும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வளர்இளம் பெண்கள் கணக்கெடுக்கப்பட்டு, அதில் சத்து குறைபாடுள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான புரதச்சத்து வழங்கவும் மற்றும் வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் சீரமைக்கப்பட்டு முன்மாதிரி மையமாக திகழும் வகையில் பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவதுடன் மையங்களுக்கு குழந்தைகளின் வருகை எண்ணிக்கை அதிகரிக்கும்.

தங்கள் பகுதிகளிலுள்ள கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம் பெண்கள் குறித்து பதிவு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும். அதேபோல் இரண்டு குழந்தைகள் உள்ள தாய்மார்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தங்கள் பள்ளி வளாகத்திலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதுடன் தினமும் மாணவர்களிடம் சுகாதாரம், பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்க வலியுறுத்த வேண்டும்.

மருத்துவக் குழு மாதம் ஒருமுறை சிறப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும். மகளிர் திட்டத்துறையின் மூலம் கிராமப்பகுதிகளில் சுகாதார குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அவர்கள் மூலமாகவும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோக்கியத்தை பாதுகாக்க வலியுறுத்த வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையுடன் வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகள் செயல்பட்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தினமும் பதிவேற்றம் செய்து அரசின் திட்டங்களை சிறப்பாக செயல் படுத்தப்பட்டதற்கான பாராட்டுக்களை சிவகங்கை மாவட்டம் பெறவேண்டும்.

அதற்கு அனைத்துறை அலுவலர்களும் சிறப்பாக செயலாற்றி மாவட்டத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட அனைவரும் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யோகவதி, பயிற்சி மருத்துவ அலுவலர் ஆதவன்அரவிந்த், கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com