ரேஷன் கடைகளில் பணிபுரியும் 30 ஆயிரத்து 600 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை - அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகளில் பணிபுரியும் 30 ஆயிரத்து 600 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
ரேஷன் கடைகளில் பணிபுரியும் 30 ஆயிரத்து 600 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை - அமைச்சர் காமராஜ் தகவல்
Published on

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள குளிக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குனர் விஜயகுமார், கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயராமன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் செந்தில், குளிக்கரை கூட்டுறவு வங்கி தலைவர் சசிகுமார், துணைத்தலைவர் மலர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரடங்கு இருந்த நிலையிலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வினியோகம் செய்வதற்காக ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே கொண்டு சென்று வினியோகம் செய்யப்பட்டது. இந்த பணியினை ரேஷன் கடை ஊழியர்கள் எந்தவித தயக்கமுமின்றி செய்தனர்.

ரேஷன்கடை ஊழியர்களின் தன்னலமற்ற பணியினை பாராட்டுகின்ற வகையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் 30 ஆயிரத்து 600 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படும்.

ரேஷன் கடை விற்பனையாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.2,500, கட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு தினப்படியாக நாளொன்றுக்கு ரூ.200 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் பணியினை தங்கு தடையின்றி செய்து வரும் பணியாளர்களுக்கு அனைத்து விதங்களிலும் தமிழக அரசு துணையாக இருக்கும்.

திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான கூடுதல் அரிசி 81 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானாலும் நோயின் வீரியம் குறைவாகவே உள்ளது. ஆனாலும் பொதுமக்கள் நோயின் தாக்கத்தில் இருந்து தங்களை தாங்களே தற்காத்து கொள்ள வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 3 பேரில் கடைசி நபர் சிகிச்சை முடிந்து வரும் 19-ந் தேதி வீடு திரும்ப உள்ளார். அதன் மூலம் திருவாரூர் மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து நமது மாவட்டம் பச்சை மண்டலமாக மாற உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கூத்தாநல்லூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் லதா, தாசில்தார் தெய்வநாயகி, அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர்அகமது, துணை செயலாளர் உதயகுமார், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com