தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்க வேண்டும்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்க வேண்டும்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வாரம்தோறும் திங்கட்கிழமை நடந்து வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் மக்கள் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அங்குள்ள பெட்டிகளில் கோரிக்கை மனுக்களை போட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு ஆபத்துகால ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ முதலுதவி மையம் ஏற்படுத்தி தர வேண்டும், மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடைகளை இரவு 1 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும், மீனவர்களுக்கான ஆபத்துகால தொலைதொடர்பு வசதியை மீன்பிடி துறைமுகத்தில் ஏற்படுத்த வேண்டும், மீன்பிடி துறைமுகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சாலை சீரமைப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூர்-நாகர்கோவில் நெடுஞ்சாலையில், திருச்செந்தூர் முதல் நா.முத்தையாபுரம் வரை நீர்ப்பிடிப்பு பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இந்த சாலை தாழ்வாக இருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. ஆகையால் சாலையை உயர்த்தி அமைக்கவும், மழைநீர் ஓடுவதற்கு வசதியாக பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர், செயலாளர் மாரிசெல்வம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். திருச்செந்தூர் பகுதியில் சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆக்கிரமிப்பு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் குலசேகரநல்லூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரையிலான மங்கம்மாள் சாலையை வயல்வெளிக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்தோம். அந்த சாலையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வயலுக்கு டிராக்டர் போன்ற வாகனங்களை கொண்டு செல்ல முடியவில்லை. ஆகையால் அந்த சாலையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி கோயில்பிள்ளை நகர் அபிவிருத்தி சங்க செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி கோயில்பிள்ளைநகர் சுற்றுச்சுவரை ஒட்டி தனியார் அனல்மின்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கோயில்பிள்ளைநகர் பகுதியில் மழைநீர் வடிகால் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அந்த தனியார் அனல்மின்நிலையம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.86 லட்சம் நிதியை மாவட்ட கலெக்டரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆகையால், எங்கள் பகுதிக்கு உடனடியாக கழிவுநீர், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அரசு வேலை

ஸ்ரீவைகுண்டம் நாட்டார்குளத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், கடந்த 13-ந் தேதி எனது கணவர் அந்தோணி என்ற துரைராஜ் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்போது பெய்த கனமழையால் மின்னல் தாக்கி இறந்தார். எனவே எங்கள் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, எனது மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி வர்த்தகரெட்டிபட்டி அ.ம.மு.க. ஊராட்சி செயலாளர் பண்டாரம் என்ற மணி கொடுத்த மனுவில், ஏரல் தாலுகா சம்படி பகுதியில் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த பெண்ணின் 3 குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். ஆகையால் அந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com