மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைவருக்கும் அமல்படுத்தப்படும் - சட்டசபையில் நாராயணசாமி உறுதி

மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைவருக்கும் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைவருக்கும் அமல்படுத்தப்படும் - சட்டசபையில் நாராயணசாமி உறுதி
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

டி.பி.ஆர்.செல்வம்: மத்திய அரசு அறிவித்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் புதுவை மாநிலத்தில் எத்தனை நோயாளிகள் இதுவரை பயன் அடைந்துள்ளார்கள்?

முதல்-அமைச்சர் நாராயணசாமி: இந்த திட்டம் கடந்த 31-ந்தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் புதுவை மாநிலத்தில் இதுவரை 1.03 லட்சம் பயனாளி குடும்பங்கள் (2.68 லட்சம் நபர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2-வது கட்டமாக அனைவருக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

டி.பி.ஆர்.செல்வம்: மத்திய அரசு இந்த திட்டத்தை எந்த வருடம் கொண்டு வந்தது?

நாராயணசாமி: மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. பல்வேறு நிலைகளில் மத்திய அரசு ஒப்புதலுக்கு காலதாமதமானது.

டி.பி.ஆர்.செல்வம்: 38 ஆயிரம் குடும்பங்கள்தான் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

அன்பழகன்: புதுவை மக்கள் அனைவருக்கும் முழுமையாக செயல்படுத்தினாலே இந்த திட்டத்துக்கு ரூ.4 கோடிதான் வரும்.

சிவா (தி.மு.க.): மாகி, ஏனாமில் எல்லாம் இன்சூரன்சு திட்டம் உள்ளது. புதுவை மக்கள் என்ன பாவம் செய்தனர்?

நாராயணசாமி: அனைவருக்கும் இத்திட்டத்தை அமல்படுத்துகிறோம்.

தீப்பாய்ந்தான் (காங்): இது அரசு திட்டமா? இல்லை பாரதீய ஜனதாவின் திட்டமா? இதற்காக பாரதீய ஜனதா நிர்வாகிகள் சிலர் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர்.

அனந்தராமன் (காங்): இதைக்காட்டிதான் பாரதீய ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையே நடக்கிறது.

நாராயணசாமி: இது தனி நபர் திட்டம் அல்ல. இதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. இதற்கு மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம் உள்ளது.

அன்பழகன் (அ.தி.மு.க.): எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் எதிர்க்கட்சி தொகுதிகளில் சில திட்டங்களுக்கு விண்ணப்பம் கொடுக்கிறார்களே? அதை எப்படி எடுத்துக்கொள்வது?

(அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களும் எழுந்து பேசினார்கள். அவர்களை சபாநாயகர் சிவக்கொழுந்து அமைதிப்படுத்தினார்.)

அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ்: இந்த திட்டத்தின்கீழ் ஒருவருக்கு ரூ.434 பிரிமீயமாக செலுத்தப்படுகிறது. நான் முன்பு மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்தபோது புதுவை மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக கூறினார். இதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com