நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வு தரவரிசை மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையால் தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று ஓசூரில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது
Published on

ஓசூர்,

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணி, நேற்று ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த அணையில் நிரம்பி வழியும், உபரி நீரை, தொரப்பள்ளி, காருகொண்டபள்ளி வழியாக கொண்டு சென்றால், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய 3 தாலுகாவிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்சினையும் தீரும். எனவே, கெலவரபள்ளி அணையின் ஒரு சொட்டு நீரும் வீணாகாமல், இந்த 3 தாலுகாக்களிலும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை என்பது, தமிழ்நாட்டில் சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. சமநீதிக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு என்பது, ஏழை மற்றும் நடுத்தர குடும்ப குழந்தைகளுக்கு, கனவு மற்றும் கானல் நீராகி விட்டது.

தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகம்

இது தொடர்பாக, நீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைக்காமல், தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகம் மற்றும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என எங்கள் கட்சி கருதுகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தமிழ்நாட்டில் எந்த திட்டமும், வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. உதாரணமாக, நீட் தேர்வு விவகாரம், மழைநீர் சேகரிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றை சொல்லலாம். டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரி அருகே சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருப்பது, மற்றொரு குதிரை பேரம் நடத்துவதற்கான செயல் தான்.

ஏற்கனவே கூவத்தூரில் ஒரு குதிரை பேரம் நடந்தது. இப்போது மேலும் ஒரு குதிரை பேரம் நடக்கப்போகிறது. தற்போதுள்ள அ.தி.மு.க. ஆட்சி நிலைக்குமா, நிலைக்காதா என்பது மத்திய அரசு கையில் தான் உள்ளது.

இவ்வாறு ஜி.கே. மணி கூறினார். பேட்டியின்போது, கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் முனிராஜ், ஆறுமுகம் மற்றும் ஓசூர் நகர அமைப்பு செயலாளர் அருள்குமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com