அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணி குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பணி குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். அந்த வகையில் 2018-19-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

2018-ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு முடிவுகளின்படி மாணவ, மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 4-வது இடமும், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 5-வது இடமும் பெற்றுள்ளது. இது 2017-ம் ஆண்டு முடிவுகளை ஒப்பிடுகையில் சற்று பின்னடைவான சூழ்நிலையாகும். இதனை சரிசெய்திடும் வகையில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி நடப்பு கல்வியாண்டில் மாவட்டம் மாநில அளவில் முதன்மை மாவட்டமாக வர முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிப்பறைக்கான தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும். இத்தகைய அடிப்படை வசதியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்களிடத்தில் தகவல் தெரிவித்து உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இதுதவிர வகுப்பறைகள் இயங்கும் கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும் தொடர்ந்து கண்காணித்து, அது தொடர்பான விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு தலைமை ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.

மேலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு மாவட்டம் முழுவதிலும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை அரசுப்பள்ளிகளிலும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் மூலமாக அவர்களது பெற்றோர், குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட அனைத்து அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com