நிவாரண உதவி கேட்டு சேலத்தில் மேளதாளம் இசைத்த கலைஞர்கள்

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரண உதவி தொகை கேட்டு சேலத்தில் இசைக்கலைஞர்கள் மேள தாளங்களை இசைத்து அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை விடுத்தனர்.
நிவாரண உதவி கேட்டு சேலத்தில் மேளதாளம் இசைத்த கலைஞர்கள்
Published on

சேலம்,

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கூலித்தொழிலாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் வருவாய் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், கோவில் திருவிழாக்களிலும் மேளம் இசைக்கும் கலைஞர்கள் கடந்த 50 நாட்களாக வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனால் அவர்கள் அன்றாட செலவுக்கு வழியில்லாமல் பரிதவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சேலம் அம்மாபேட்டை மாரி உடையார் தெருவில் ஏராளமான இசைக்கலைஞர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களின் பரிதாப நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும், தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்க கோரியும் இசைக்கலைஞர்கள் சிலர் தவில், நாதஸ்வரம் இசைத்து தங்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இவர்கள் இசையால் பல்வேறு பாடல்களை பாடினர்.

500 குடும்பங்கள்

இதுகுறித்து இசைக்கலைஞர்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் நையாண்டி மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 50 நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காத நிலையில் வருவாய்க்கு வழியின்றி தவித்து வருகிறோம்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஊரடங்கு நிலை நீடிக்கும் என்பது தெரியாததால் எங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. மக்களை மகிழ்விக்கும் எங்களை போன்ற கலைஞர்களுக்கு அரசு போதிய நிவாரணம் வழங்கி வாழ்வாதாரம் காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலம் சிறக்க மேளம் அடிக்கிறோம் கொரோனாவால் சிக்கித் தவிக்கிறோம் என்று பாடல் மூலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com