சாலை அகலப்படுத்தும் பணிக்காக கட்டிடங்களை அகற்ற வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகை

சாலை அகலப்படுத்தும் பணிக்காக கட்டிடங்களை அகற்ற வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை அகலப்படுத்தும் பணிக்காக கட்டிடங்களை அகற்ற வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகை
Published on

மீன்சுருட்டி,

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களை இடித்து, நிலம் கையகப்படுத்துவதற்கு கடந்த மாதம் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நிலம் உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி(நேற்று) சாலை அகலப்படுத்தும் பணிக்காக மீன்சுருட்டி பகுதியில் உள்ள கட்டிடங்களை அகற்றி கொடுப்பதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில், நேற்று மாலை ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் மகேஷ்வரன் தலைமையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் மற்றும் அரசு அலுவலர்கள், போலீசார் கடை மற்றும் கட்டிடங்களை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரங்களுடன் மீன்சுருட்டி கடைவீதிக்கு வந்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த நில உரிமையாளர்கள், குடியிருப்போர் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கம், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் கட்டிடங்களை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நஷ்டஈடு தொகையை உயர்த்த கோரிக்கை

அப்போது சாலை அகலப்படுத்தும் பணிக்கு நிலம் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு தொகையை 4 மடங்கு உயர்த்தி தரவேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டும் அல்லது ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகை முழுவதுமாக கொடுத்த பின்னரே நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பொதுவான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை கூறி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதில் வர்த்தக சங்க தலைவர் ராஜா ஜெயராமன், பா.ம.க. மாநில துணை செயலாளர் வைத்தி, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், வக்கீல் சேதுராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொய்யாமொழி மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞர் அணி செயலாளர் இளையராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதற்கு அதிகாரிகள், இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என்று கூறியதன்பேரில், முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் பணியை தொடர்ந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் குண்டவெளி ஊராட்சி மன்ற அலுவலகத்தை மட்டும் இடித்து விட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com