திங்கள்நகரில் ஜவுளி கடைகளை அடைத்து வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கள்நகரில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி கடைகளை அடைத்து வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திங்கள்நகரில் ஜவுளி கடைகளை அடைத்து வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

இரணியல்,

திங்கள்நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திருமண மண்டபங்கள், தனியார் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக தள்ளுபடி விலையில் விற்பனை என்ற பெயரில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடை உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த தற்காலிக கடைகள் அமைப்பதற்கு ஜவுளி கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த கடைக்காரர்கள் அரசுக்கு விற்பனை வரி, வருமான வரி செலுத்துவது இல்லை என்றும் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து திங்கள்நகர் வர்த்தகர் சங்கம் சார்பில் நேற்று ராதாகிருஷ்ணன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திங்கள்நகர் வர்த்தகர் சங்க தலைவர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன்குட்டி மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். வர்த்தகர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்த இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் திங்கள்நகர் சுற்றுவட்டார பகுதிகளில் திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் தற்காலிக ஜவுளிக்கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படாது என்று உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அந்த பகுதியில் ஒரு மணி நேரம் ஜவுளி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com