கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு

கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு
Published on

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன்படி கடலூர் பான்பரி மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவை கடலூர் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

இங்கு வந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச்சென்றனர். இதற்கிடையில் பஸ் போக்குவரத்து தொடங்க இருப்பதால் பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டை இம்பீரியல் சாலையில் உள்ள கோ ஆப்-டெக்சுக்கு எதிரே இடமாற்றம் செய்ய நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதுபற்றி பஸ் நிலையத்தில் காய்கறி கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடமும் தெரிவித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரத்தொடங்கின. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி அறிவுரையின்பேரில் வருவாய் அலுவலர் சுகந்தி மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து, வியாபாரிகளை அங்குள்ள கடைகளை காலி செய்து கோ ஆப்-டெக்ஸ் எதிரே செல்லுமாறு கூறினர்.

அதற்கு வியாபாரிகள் அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆகவே நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பஸ் நிலையத்தில் நடுவில் இருந்த கடைகளை மட்டும் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மதியம் வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளிடையே போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் கோஆப்-டெக்ஸ் எதிரே செல்ல சம்மதம் தெரிவித்தனர்.ஆனால் உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் கடைகள் வைப்பது பற்றி வேளாண் துறை அதிகாரிகள் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com