விருத்தாசலம் பகுதியில் விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தம்

விருத்தாசலம் பகுதியில் விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விருத்தாசலம் பகுதியில் விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தம்
Published on

விருத்தாசலம்,

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தட்கல், தாட்கோ ஆகிய திட்டங்கள் மூலம் விவசாய கிணறுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு மின் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது.

இதில் விருத்தாசலம் மின்வாரிய கோட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் 30 மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல் திட்டக்குடி கோட்டத்திலும் மின்மோட்டார்களுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலவச மின்சாரத்தின் பயன்பாட்டை அளவிடும் வகையில்தான் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை இல்லை என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும், இது படிப்படியாக விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிப்பதற்கான மறைமுக வழியே என்கிறார்கள் விவசாயிகள்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போதைய நிலையில் மின்மோட்டார்களை பயன்படுத்தியே விவசாயம் செய்து வருகிறோம். அரசு எங்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கினால், நிலத்தில் விளையும் தானியங்களை விற்பனை செய்து, முழு தொகையையும் மின்கட்டணத்துக்கே செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் விவசாய தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழிலுக்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com