கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்பு வாடகை கார் ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்பு கார்களை நிறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனம் முன்பு வாடகை கார் ஓட்டுனர்கள் முற்றுகை போராட்டம்
Published on

பூந்தமல்லி,

கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட், அண்ணா நகர் உள்ளிட்ட குறிப்பிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் கேப் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் கேப் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் இயக்கப்படுகிறது. இதில் ஆட்டோவில் ஒரு நபருக்கு ரூ.10ம், காரில் ஒரு நபருக்கு ரூ.15ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி தமிழக சுதந்திர வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் முன்பு கார்களை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளிடம் எங்களது கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தோம். ஆனால் இதுகுறித்து முடிவு எடுக்கக்கூடிய மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் வெளிநாடு சென்று இருப்பதால் வரும் 30ம் தேதி இதுகுறித்து விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் கேப் மூலம் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இதனை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com