

மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக இம்மாதம் 2-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்தின் தேவையை கருத்தில் கொண்டு கடந்த 17-ந் தேதி அதிகபட்சமாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,656 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,401 கனஅடியாக குறைந்தது.
தண்ணீர் திறப்பு குறைப்பு
இதற்கிடையே, அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்தைவிட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு பலமடங்கு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து கொண்டே வருகிறது.
வருகிற ஜனவரி மாதம் வரை பாசனத்துக்கு தண்ணீர் அளிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் நேற்று முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியில் இருந்து 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 87.10 அடியாக இருந்தது.