எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ரூ.1,091 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் வழங்குகிறார்

தஞ்சையில் நாளை நடக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.1,091 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ரூ.1,091 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் வழங்குகிறார்
Published on

தஞ்சாவூர்,

தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 27-வது மாவட்டமாக தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் நாளை(புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து, ரூ.632 கோடியே 48 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்ட 105 திட்ட பணிகளை திறந்து வைத்தும், ரூ.186 கோடியே 77 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான 43 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், 40,101 பயனாளிகளுக்கு ரூ.271 கோடியே 90 லட்சத்து 30 ஆயிரத்து 387 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார். மொத்தம் ரூ.1,091 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 387 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து காரில் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அவர், அங்கிருந்து காரில் புறப்பட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மாநகராட்சி திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல் விழா நடைபெறும் இடத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி அமைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com