எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரலாறு படைக்க வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

“சேலத்தில் 30-ந்தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரலாறு படைக்க வேண்டும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரலாறு படைக்க வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
Published on

சேலம்,

சேலத்தில் நடந்த எம் ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் குறித்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

முதல்-அமைச்சராக ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பிலே இருந்தபோது, சட்டமன்றத்தில் பேசிய அவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 32 மாவட்டத்திலும் சிறப்பாக நடைபெறும் என சூளுரைத்தார். ஜெயலலிதாவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எல்லா மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறது.

சேலம் மாங்கனி மாவட்டம் மட்டுமல்ல. மக்கள் அலைகடலென திரளும் மாவட்டமாகும் என்பதை நான் கண் கூடாக பார்த்திருக்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொள்வதானால், சேலம் மாவட்டத்தைதான் அவர் முதலில் தேர்வு செய்வார்.

சேலத்தில் வருகிற 30-ந்தேதி தமிழகமே வியக்கத்தக்க அளவுக்கு, ஏன் டெல்லியே திரும்பி பார்க்கும் அளவுக்கு சிறப்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட வேண்டும். இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழ்நிலைக்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கூட்டி இந்த ஆட்சியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரலாறு படைக்கிற வகையில் அமைந்திட வேண்டும்.
பெரியார் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகிற அளவுக்கு வசதிகள் உள்ளன. ஆகவே, இந்த சிறப்பு வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்கவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருகண்களாக வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள். இங்கு மாவட்ட கலெக்டர், பயனாளிகள் பட்டியலில் மட்டும் 41,612 பேர் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

பயனாளிகளே இத்தனைபேர் இருக்கிறபோது, மேலும் பொதுமக்கள் என பார்த்தால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுகிற கூட்டமாக இருக்கும். எனவே, எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவில், முதல்-அமைச்சருக்கு கூடுகிற கூட்டம் எந்த சக்தியாலும் வெல்லமுடியாது என்கிற சரித்திர வரலாற்றை சேலம் மாவட்டம் உருவாக்கி தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com