திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், கலெக்டர் ஆய்வு

திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், கலெக்டர் நேரில் பார்வையிட்டனர்.
திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், கலெக்டர் ஆய்வு
Published on

கொரோனா சிகிச்சை மையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்ட 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான நாசர் மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

2,734 படுக்கைகள் தயார்

அதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை மையத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா மையமும், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 400 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. 80 படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,834 படுக்கைகள் என மாவட்டம் முழுவதும் 2,734 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை தினமும் கண்காணித்து பெற்று வருகிறது.

சிகிச்சைக்கு அனுமதி

மேலும் மருத்துவமனையில் 170 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. நிமிடத்திற்கு 2 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிலையமும் செயல்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் 9 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரியில் 110 நபர்கள் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதப்படுத்தும் விதமாகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன், தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசிஸ்ரீவத்சவ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆகியோர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை மற்றும் கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் வழங்கக்கூடிய சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வில் திருத்தணி எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன் உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com