கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வினியோகம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடந்தது. இதனை கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வினியோகம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
Published on

கரூர்,

தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 603 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு, அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் பஸ் நிலையம், ரெயில்நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்கள் என 831 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரூர் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கஸ்தூரிபா தாய்சேய் நலவிடுதியில் காலை 7 மணியளவில், ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்தினை வழங்கி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:


கரூர் நகராட்சி பகுதியில் குடியிருப்புகள் விரிவாக்கம் பெற்று வருவதால் மக்களின் நலன் கருதி, கடந்த முறையை விட தற்போது கூடுதலாக 82 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், இதற்கு முன் எத்தனை தடைவ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இந்த சொட்டு மருந்து கூடுதல் தவணையாகக் கொடுக்கப்படுகிறது. சமுதாயத்திலிருந்தே போலியோ நோய்க் கிருமியை இல்லாமல் செய்வதே இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக (2011க்கு பிறகு) போலியோ நோய் பாதிப்பு ஏதும் இல்லை. கரூர் மாவட்டத்தில் 18 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை.


போலியோ சொட்டு மருந்து முகாம் பணிக்காக தன்னார்வ அமைப்புக்களை சேர்ந்த பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் போன்ற துறைகளைச் சார்ந்த சுமார் 3,360 நபர்கள் இம்முகாமில் பணியில் பங்கேற்று வருகின்றனர். இம்முகாம் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் 98 மேற்பார்வையாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் வருகிற 16ந்தேதி வரை பிறக்கபோகும் குழந்தைகளுக்கு கூட சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நகர் நல அதிகாரி ஸ்ரீபிரியா, மாவட்ட தாய் சேய் நல அதிகாரி ரேவதி, நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் நித்தியா, ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, நகர செயலாளர் நெடுஞ்செழியன், இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், தொழிற்சங்க செயலாளர் பொரணிகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com