ரூ.73½ லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் ரூ.73½ லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
ரூ.73½ லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் ரூ.73 லட்சத்து 72 ஆயிரம் செலவில் மகளிர் சுயஉதவிக் குழு கூட்டமைப்பு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 78 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் 3 பரிசோதனை மையங்களை அரசு வழங்கியதால், அதிகமான நபர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தொற்று நோயை கண்டறியும் நிலையை பெற்று உள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு சரியான, தேவையான வழிமுறைகளை, நடைமுறைகளை எடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தேவையான முறையான சிகிச்சைகளை அளித்ததால் இந்த நிலையை தூத்துக்குடி மாவட்டம் அடைந்து இருக்கிறது. நாளை மறுநாள் (அதாவது நாளை) முதல்-அமைச்சர் நெல்லை மாவட்டத்துக்கு வந்து கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்துகிறார். அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் செய்து வந்தாலும் கூட வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு தொய்வின்றி கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன்படி பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரேசுவரி, தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, கருங்குளம் ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன், துணைத்தலைவர் லட்சுமணபெருமாள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பாலசரசுவதி நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வல்லநாடு

ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ புதிய கட்டிட திறப்பு விழா கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதிராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி வரவேற்றார்.

அமைச்சர் பேட்டி

விழாவில், அமைச்சர் கடம்பூர்ராஜூ கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகம் முழுவதிலுமே கொரோனா வைரஸ் தாக்குதல் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

மார்ச் 22-ந் தேதி முதல் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருகிறது.

முதல்-அமைச்சர், பல்வேறு துறை அலுவலர்களுடன் சிறப்பு ஆய்வுக் கூட்டங்களை தினமும் நடத்தி கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தலைமை செயலக அலுவலர்களுடனும், மாவட்ட கலெக்டர்களுடனும் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழப்பு 0.6 சதவீதமாக உள்ளது.

நோய்த்தொற்றை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் மூன்று ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கபசுர குடிநீர் வழங்கல்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 12 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் மூலம் கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்காக சித்த மருத்துவ பிரிவில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவத்திற்காக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தனி கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை பணியாளர்கள் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உள்ளரங்கில் சூட்டிங் நடத்த அனுமதிக்க பட்டுள்ளது. சினிமாத்துறை ஷூட்டிங் நடத்த தற்போது வாய்ப்பு இல்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர்ராஜூ, கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் அதிகாரிகள், பிரமுகர்களுக்கு சித்த மருத்துவர்கள் செல்வக்குமார், ரதிசெல்வம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கபசுரக்குடிநீர் வழங்கினர்.

கலந்து கொண்டவர்கள்

இதில், திட்ட இயக்குநர் தனபதி, ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் சங்கரநாராயணன், டாக்டர் சுப்பையாபாண்டியன், கருங்குளம் யூனியன் துணைச்சேர்மன் லட்சுமணப்பெருமாள், கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட இளைஞர்இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் காசிராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, ஆய்வாளர் ஷாகீர், மருந்தாளுனர் வெங்கடேசன் மற்றும் மருத்துவத்துறையினர், நோயாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார் தலைமையில் மருந்தாளுனர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கருங்குளத்தில் ரூ.76.20 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கிருமிநாசினி தெளிப்பு

முன்னதாக, கயத்தாறு அருகிலுள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்த 35 வயதான விவசாயி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுகாதார துறையினர் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அங்கு தெருக்களில் டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவருடன், கோவில்பட்டி சுகாதார த்துறை துணைஇயக்குநர் அனிதா, பஞ்சாயத்து துணைத்தலைவர் சுப்பாராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஜெயலலிதா பேரவை நகரச்செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com