

தீவிர வாக்குசேகரிப்பு
நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். வலங்கைமான் ஒன்றியத்தில் கொட்டையூர், அரவூர், மாணிக்கமங்கலம், சாரநத்தம், பூனாயிருப்பு, மாத்தூர், திருவோணமங்கலம், புளியங்குடி, பெருங்குடி, சேத்தனூர், தென்குவளைவேலி, பூந்தோட்டம், ஆலங்குடி, புலவர்நத்தம், குருவாடி, நார்த்தாங்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் காமராஜ் வாக்குசேரித்தார்.
நடவு நட்டு ஆதரவு திரட்டினார்
அப்போது வலங்கைமான் அருகே அரவூரில் நெல் நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை சந்தித்து அவர்களுடன் நடவு நட்டு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கின்ற வகையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. கடந்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உச்சவரம்பை தளர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அங்கிருந்த பெண்கள் ஆர்வமுடன் இரட்டை விரலை காட்டி வெற்றி உங்களுக்கே என வாழ்த்தி வழியனுப்பினர்.
முன்னதாக கொட்டையூரில் பிரசாரத்தினை தொடங்கிய அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-
நன்னிலம் தொகுதி மக்களால் சட்டசபை உறுப்பினராக, உணவுத்துறை அமைச்சராக 10 ஆண்டுகளாக உங்களுக்காக பணியாற்றியுள்ளேன். என்னுடைய பாரபட்சமற்ற பணியை பார்த்து நீங்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள். நான் உயிருக்கு போராடிய போது நலம் பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து உயிரை மீட்டு கொடுத்துள்ளீர்கள். இதற்காக நான் என்றைக்கும் உங்களிடம் நன்றியுடனும், விசுவாசத்துடனும் இருப்பேன்.
இறைவன் கொடுத்த வரம்
உங்களுக்கு என் சந்ததியினரே நன்றிக்கடன் பட்டுள்ளார்கள். நன்னிலம் தொகுதி முழுவதும் செல்கின்ற இடமெல்லாம் மக்கள் என்னை சந்தித்து எனது உடல் நலம் குறித்து வாஞ்சையுடன் விசாரிக்கிறார்கள். எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதாக உறுதி கூறுகிறார்கள். இத்தகைய அன்புமிக்க நன்னிலம் தொகுதி வாக்காளர்களை பெற்றிருப்பது இறைவன் எனக்கு கொடுத்த வரமாகவே கருதுகிறேன். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். அப்போது பா.ம.க. மாநில துணைத்தலைவர் வேணு. பாஸ்கரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.