தஞ்சையில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு அமைச்சர், எம்.பி. மலர்தூவி மரியாதை

தஞ்சையில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தஞ்சையில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு அமைச்சர், எம்.பி. மலர்தூவி மரியாதை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சமூகநீதி நாள் உறுதிமொழியை அமைச்சர், வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சட்டப்படிப்பு முடித்த 5 பேருக்கு தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையையும், 2 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகிய பணிக்கான நியமன ஆணைகளையும், வருவாய்த்துறையின் மூலம் 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 11 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வருமானச்சான்று ஆகியவற்றையும் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

விழிப்புணர்வு பேரணி

தொடர்ந்து அவர், சமூகநீதி நாள் விழிப்புணர்வு பேரணியை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், கோலாட்டம், புலியாட்டம், தாரை, தப்பட்டையுடன் பேரணி புறப்பட்டு முக்கியவீதிகள் வழியாக அரண்மனை வளாகத்தை சென்றடைந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குனர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com